Welcome to Rathvi Trader!!!
முதலில் விவசாயமும் விவசாயிகளும் இந்த நாட்டிற்கு எவ்வளவு முக்கியம் என நாம் உணர வேண்டும். நமது மூதாதையர்கள் விவசாயத்திற்கு எவ்வளவு முன்னுரிமை கொடுத்தார்கள் என்று நாம் அறிந்துகொள்வது அவசியம்!!
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே விவசாயிகள்தான். அதனால், தான் நமது முன்னால் பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” எனப் புகழ்கின்றார்.
இந்திய மக்கள் தொகையில் 64 சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெருநாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரு நாடு”
என்று முண்டாசு கவிஞன் பாரதியால் புகழப்பட்ட நம் நாட்டில் இயற்கை வேளாண்மை என்பது நாம் மூதாதையர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது.
நம் சங்க இலக்கிய நூல்கலான புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் கூட இயற்கை வேளாண்மை பற்றி பல குறிப்புகள் உள்ளன. நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர், அதிகளவு மகசூல் பெற்றனர்.
தமிழ் மறையாம் திருக்குறளிலும் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்”
உழவன், ஒரு பலம் புழுதி கால் பலமாகும்படி தன் நிலத்தை உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும். இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம். திருவள்ளுவர் உழவு எனும் அதிகாரத்திலேயே விவசாயம் பற்றிய பல விசயங்களை புரிய வைக்கின்றார்.“ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு”
ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது எனும் குறலின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறிகிறோம், மேலும் வேளாண்மைக்கு எது சிறந்ததென ஒரு குறலின் மூலமே அறிகிறோம்.